பதிவு செய்த நாள்
04
மார்
2023
10:03
சூலூர்: சூலூர் ஸ்ரீ சக்தி பஞ்சாட்சரி நாக மாதா கோவில் ஆண்டு விழாவை ஒட்டி, திருவீதி உலா நடந்தது.
சூலூர் திருச்சி ரோடு ராயர் தோட்டத்தில் உள்ள, ஸ்ரீ சக்தி பஞ்சாட்சரி நாக மாதா கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், 18 ஆம் ஆண்டு விழாவும், பொங்கல் விழாவும் கடந்த, 26 ம்தேதி துவங்கியது. 27 ம்தேதி கொடியேற்றப் பட்டது. தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் மாலை, துன்பங்கள் நீங்க செய்யும் திரு விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. 10:30 மணிக்கு, ஸ்ரீ நாகமாதவுக்கு பொங்கல் வைக்கப்பட்டு நிவேத்தியம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு தையல்நாயகி உடனமர் வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் திருவீதி உலா ஜெண்டை மேளத்துடன் துவங்கியது. மார்க்கெட் ரோடு, திருச்சி ரோடு வழியாக சென்ற உலா, நாகமாதா கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு வானவேடிக்கை நடந்தது. இன்று கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.