பதிவு செய்த நாள்
14
செப்
2012
11:09
திருச்சி : ""நித்ய அன்னதான திட்டத்துக்கு, ஏழு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு, "வைர அட்டை வழங்கப்படும். அதன் மூலம், தமிழக கோவில்களில், ஆயுள் முழுவதும், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம், என, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர் தனபால் கூறினார். ஸ்ரீரங்கத்தில் நேற்று துவங்கிய நித்ய அன்னதான திட்டம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் தனபால் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோவிலில், நித்ய அன்னதான திட்டத்துக்காக, ஒரே நேரத்தில், 200 பேர் அமரும் வகையில், சாப்பாட்டுக் கூடம் ஒன்று புதிதாக கட்டப்படும். தற்போது அன்னதானத் திட்டத்தில் உள்ள, நான்கு பணியாளர்களுடன் மேலும், 30 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு சாப்பாடு, 25 முதல், 35 ரூபாய் மதிப்பில், வார நாளில் காலை முதல், இரவு வரை, சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு கூட்டு அல்லது பொறியல் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், இவற்றுடன், வடை, பாயாசமும் சேர்த்து வழங்கப்படும். உணவு, சாம்பார், ரசம் சூடாக வைத்து பரிமாற, மூன்று அடுக்கு கொண்ட, எட்டு டிராலிகள் வாங்கப்பட்டுள்ளன. தினமும், 200 பேர் உணவு அருந்துவர் என்றும், விடுமுறை நாட்களில், 500 முதல், 1,000 பேர் வரை, உணவு அருந்துவர் என்றும் எதிர்பார்க்கிறோம். வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழா நாளில், ஆயிரக்கணக்கானோர் வந்தால் கூட, அன்னதானம் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். நித்ய அன்னதான திட்டத்துக்கு, ஏழு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு, "வைர அட்டை வழங்கப்படும். அதன்மூலம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தமிழக கோவில்களில், ஆயுள் முழுவதும், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இச்சலுகை செல்லுபடியாகாது. கோவில் திருப்பணிக்காக, ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு, "பிளாட்டினம் அட்டை வழங்கப்படும். இதன் மூலம், தமிழக கோவில்களில், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்வதோடு, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, "காட்டேஜ்களில் இலவசமாக தங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.