பதிவு செய்த நாள்
14
செப்
2012
11:09
நகரி : திருப்பதியில் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, தேவஸ்தானம் சார்பில், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், தலைவர் பாபி ராஜி தலைமையில் நடந்தது. பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருமலையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமலையில் பசுபுதாரா, கனகதாரா நீர்த்தேக்கங்களில் இருந்து, திருமலைக்கு தண்ணீர் சப்ளை செய்ய குழாய் அமைப்பதற்கு, வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி துவங்கும் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களின் தேவைக்கேற்ப குடிநீர் சப்ளை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமலையில் பக்தர்களின் வசதிக்காக, வகுளாதேவி தாயார் பெயரில், 280 அறைகள் கொண்ட புதிய தங்கும் விடுதி கட்ட, ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பிரம்மோற்சவ நாட்களில் குறைந்த அளவே, வி.ஐ.பி., டிக்கெட்டுகள் வழங்கப்படும். வரும், 18ம் தேதி திருமலைக்கு வரவுள்ள முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மலையப்ப சுவாமிக்கு, மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரம் சீர்வரிசை சமர்ப்பித்த பின்னர், திருமலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள, புறவழி வட்டச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். வரும், 22ம் தேதி கருட வாகன சேவை தினத்தன்று, இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.