பதிவு செய்த நாள்
14
செப்
2012
11:09
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, ஆண்கள் சாக்கு ஆடை அணிந்து, வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். கமுதி அருகே செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் விழாவையொட்டி ஆண்கள், தலை முதல் கால் வரை வைக்கோல் சுற்றி, அதன் மீது சாக்கு உடை அணிந்தனர். காலை முதல் மாலை வரை உணவை தவிர்த்து விரதம் இருந்தனர். பின்னர் பெண்கள் மற்றும் ஆண்கள், தனித்தனியே கும்மிப்பாட்டு பாடி முளைப்பாரியை சுற்றி வந்தனர். இதையடுத்து ஊன்றுகோலுடன், காலில் சலங்கை கட்டிக்கொண்டு 2 கி.மீ., ஆடிக்கொண்டே சென்றும், சிலர் அக்னிசட்டி எடுத்தும், உடலில் அலகு குத்தியும், சேத்தாண்டி வேஷமிட்டும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் சிலர் கூறுகையில், ""குடும்ப பிரச்னைகள், குழந்தையின்மைக்காக வேண்டிக்கொள்வோம். அடுத்த ஆண்டுக்குள் கண்டிப்பாக நிறைவேறிவிடும். இதனால் இது போன்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம், என்றனர்.