பதிவு செய்த நாள்
10
மார்
2023
01:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பங்குனி மாத கோடை வசந்த உற்சவம் மார்ச் 27ம் தேதி துவங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவம் வரும் 27ம் தேதி முதல் 04.04.2023-ம் தேதி வரையும், பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு 05.04.2023-ந் தேதியன்றும் நடைபெறவுள்ளது. 05.04.2023-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை 10.00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செல்லுார், வைகை வடகரையில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்தும் பின் மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி திருக்கோயில் வந்து, பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை முடிந்து சேத்தியாவார்கள். எனவே, மேற்படி உற்சவ நாட்களான 27.03.2023 முதல் 05.04.2023 தேதி வரையிலும் திருக்கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, அம்மன், அருள்மிகு சுவாமிக்கு தங்காத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேடங்கள் எதுவும் பதிவு செய்து நடத்திட இயலாது என்ற விபரத்தினையும் இத்திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றார்கள். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இத்திருக்கோயில் தக்கார், துணை ஆணையர் / செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.