பதிவு செய்த நாள்
11
மார்
2023
03:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மார்ச் 17 ல் பூச்சொரிதல் விழாவும், தொடர்ந்து மார்ச் 28 பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி மார்ச் 27 இரவு காப்பு கட்டுதலும், மறுநாள் காலை கொடி ஏற்றத்துடன் விழா துவங்குகிறது. அன்று இரவு பூதகி வாகனத்தில் அம்மன் வீதி வலம் வருகிறார். மேலும் காலை, மாலை அம்மன் வெள்ளி சிங்க வாகனம், அன்னம், ரிஷப, யானை, கிளி, காமதேனு வாகனங்களில் வீதியுலா வருவார். மார்ச் 31 காலை அம்மன் காளி அலங்காரம், மாலை 5:00 மணிக்கு இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியில், மாகாளி வேஷம் நடக்கிறது. ஏப்., 4 இரவு குதிரை வாகனத்திலும், ஏப்., 5 இரவு 8:10 மணிக்கு முக்கிய நிகழ்வாக மின் அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் அம்மன் வலம் வர உள்ளார். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கள்ளர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். அன்று காலை தீர்த்தவாரி, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள் பாலிக்கிறார். ஏப்., 7 காலை 4:00 மணி தொடங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து 10:00 மணிக்கு பாலாபிஷேகமும், இரவு சயன கோலத்தில் பூப்பல்லத்தில் வீதிவலம் வர உள்ளார். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.