மடப்புரத்தில் எலுமிச்சை மாலை விலை உயர்வு, பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2023 07:03
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் எலுமிச்சை மாலை விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அம்மனுக்கு பக்தர்கள் 9 எலுமிச்சம்பழம், 21 எலுமிச்சம்பழம் முதல் ஆயிரத்து ஒன்று எலுமிச்சம்பழம் கொண்ட மாலைகளை சார்த்தி வழிபடுவார்கள், அம்மனை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்காக கோயில் வாசல் முன் 20க்கும் மேற்பட்ட எலுமிச்சை மாலை விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன. கோடை காலம் தொடங்கியதை அடுத்து எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. 21 பழங்கள் கொண்ட மாலை 50ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒன்பது பழங்கள் கொண்ட மாலையே 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வியாபாரி முத்துச்சாமி கூறுகையில்: மதுரை மார்கெட்டில் ஒரு மூடை பழம் இரண்டாயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு மூடையில் 800 பழங்கள் இருந்தாலும் அதில் 100 பழங்கள் கழிவாக போய்விடும், மீதியுள்ள பழங்கள்தான் சைஸ் வாரியாக பிரித்து விற்பனை செய்ய வேண்டும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த விலை உயர்வு இருக்கும், என்றார்.