பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
சபரிமலை: சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை திறந்தது. 21-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலை நடை எல்லா தமிழ்மாதமும் முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளும், நெய்யபிஷேகமும் நடைபெறும். புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினார். எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இன்று, அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் நிர்மால்யதரிசனம், கணபதிஹோமத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறும். இன்று களபாபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு கோயில் கிழக்கு மண்டபத்தில் களபபூஜை நடைபெறும். தொடர்ந்து 11.30 மணிக்கு பிரம்ம கலசம் பவனியாக எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். நடைதிறக்கப்பட்டிருக்கும் ஐந்து நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, உதயாஸ்தமனபூஜை, படிபூஜை, , அத்தாழபூஜை ஆகியவை நடைபெறுகிறது. 21-ம் தேதி இரவு அத்தாழபூஜைக்கு பின்னர் நடை அடைக்கப்படும். அதன், பின்னர் ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 16-ம் தேதி மாலையில் திறக்கும். 17-ம் தேதி அடுத்த மண்டல காலம் முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி தேர்வு நடைபெறும். ஆன்லைன் பதிவு: கடந்த மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் வசதிக்காக தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவு வசதி செய்யப்பட்டிருந்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய கேரள போலீஸ் முடிவு செய்துள்ளது. வரும் மண்டல சீசனுக்கான ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.