பதிவு செய்த நாள்
23
மார்
2023
04:03
திருப்பூர்: பங்குனி யுகாதி பண்டிகையை முன்னிட்டு, புண்ணியதலங்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து, விநாயகர் கோவில்களில் அபிேஷகம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.
சித்திரைக்கனிக்கு, புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்படும். அதேபோல், பங்குனி யுகாதி பண்டிகையின் போதும், விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அவிநாசி, கொடுமுடி, கூடுதுறை ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தக்காவடி எடுத்து வழிபடுகின்றனர். நேற்று காலை, தீர்த்தம் எடுத்துவந்து, மேள, தாளத்துடன் திருவீதியுலா சென்று, கோவிலை அடைந்தனர். விநாயகப்பெருமானுக்கு, புனித தீர்த்தம் மற்றும் வேப்பம்பூ கலந்த பஞ்சாமிர்தத்தில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜையில் பங்கேற்று பக்தர்கள் வழிபட்டனர். வேப்பம்பூ கலந்த பஞ்சாமிதர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.