திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 01:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் பூமி நீளா சமேத சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத் தலங்களுல் முதன்மையானது. மூலவர் சன்னதி அஷ்டாங்க விமானத்தை பெற்ற சிறப்புடையது. இந்த விமானத்திலிருந்து பொதுமக்களுக்கு திருமந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த பெருமைக்குரியது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் ஆகும். தேவர்களை துன்புறுத்திய அசுரன் இரண்யனை வதம் செய்ய விஷ்ண தேவர்களுடன் கூடி ஆலோசித்த தலம், நரசிம்ம அவதார கோலம் காட்டிய தலம், அத்துடன் விஷ்ணு நின்ற, கிடந்த, இருந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களில் காட்டியருளியதோடு இங்கேயே எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலுக்கு கடந்த 1961, 1992, 2004 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது தங்க விமானத் திருப்பணி தவிர்த்து மற்ற திருப்பணி நடந்து 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேம் நடைபெற்றது.
மார்ச் 23ல் 32 வேதிகை, 44 குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிரதான பட்டாச்சார்யர் ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பட்டாச்சார்யர்கள் பூஜைகள் செய்ய, நேற்றுடன் ஏழு கால யாகபூஜைகள் பூர்த்தியாகின்றன. இன்று அதிகாலை 5:00 மணிக்கு பூஜைகள் துவங்கி 8:05 மணிக்கு 8ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி காலை 9:38 மணியிலிருந்து காலை 10:32 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் அலங்கார திருவாரதனம் நடைபெறும். காலை 11:50 மணிக்கு ஸர்வ தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள், எம்பெருமானார் தங்கப்பல்லக்கிலும் திருவீதிப் புறப்பாடு நடக்கும்.