பதிவு செய்த நாள்
29
மார்
2023
12:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில், கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
சென்னை, பக்தர்களின் சிவநாமம் விண்ணைப் பிளக்க, மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொண்டை மண்டல சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும் பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா விமரிசையாக நடக்கும். அந்தவகையில், இந்தாண்டிற்கான பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று காலை 9:15 மணிக்கு வெள்ளி சூரிய வட்டம் வாகனத்தில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏப்., 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது. பங்குனி பெருவிழாவின் பிரதான நிகழ்வாக ஏப்., 3ம் தேதி காலை 6:30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:25 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 4ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. திருஞான சம்பந்தர் எழுந்தருளல், எலும்பை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 2:45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. ஏப்., 5ம் தேதி ஐந்திரு மேனிகள் விழா நடக்கிறது. ஏப்., 6ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் ஹரிஹரன், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.