பதிவு செய்த நாள்
31
மார்
2023
05:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில், இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி விழா உற்சாகமாக நடந்தது.
முத்தாலம்மன் கோயில் கொடி மரத்தில் மார்ச் 28 அன்று காலை சிங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு விழா துவங்கியது. அம்மன் பூதகி, சிங்க, அன்ன வாகனத்தில் வலம் வந்தார்.
நான்காம் நாள் விழாவான இன்று காலை 10:00 மணிக்கு அம்மன் வால், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், கதை, சூலம், அக்னி ஏந்தி, இடுப்பில் வளரி, சுடர் கிரீடம் தரித்து, மகிஷாசுரமர்த்தினியாக காளி அலங்காரத்தில் வீற்றிருந்தார். மதியம் 12:00 மணிக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறவன், குறத்தி மற்றும் சுவாமி வேடமிட்டு அம்மன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2:00 மணிக்கு அம்மன் சின்ன கடை தெரு வன்னியர் குல சேர்வைக்காரர்கள் மண்டபடியில் சேர்க்கை ஆகினார். பின்னர் மாலை 6:00 மணிக்கு இரட்டை காளை மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி வேடமணிந்தவர், சூரனை வதம் செய்ய ஏறி அமர்ந்தார். அப்போது பெண் வேடமிட்ட ஆண்கள் வண்டியில் ஆடியபடி முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சின்ன கடை தெருவில் மாகாளி வேடமணிந்தவர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு 11:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.