பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
10:04
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மஹா சிவராத்திரி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி ஆகியவைகள் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர் திருவிழாவை ஒட்டி, நேற்று மாலை, ஆணை பெறுதல், புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை, வாஸ்து சாந்தி நடந்தது. இன்று அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், மஹாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு, வேள்ளிபூஜை நடந்தபின், 9:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிமரத்தில், நந்தி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, வேள்விபூஜை, அபிஷேகம், திருவீதியுலா நடக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் தேர் திருவிழாவில், நாள்தோறும் மாலை, 4:00 மணிக்கு, வேள்வி பூஜை, திருவீதியுலா நடக்கிறது. திருவிழாவின் ஐந்தாம் நாளான, வரும், 5ம் தேதி, மாலை, 4:30 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.