பதிவு செய்த நாள்
03
ஏப்
2023
03:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி, பூவோடு மற்றும் பறவைக்காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கடந்த மாதம், 14ம் தேதி நோன்பு சாட்டப்பபட்டு, 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், கம்பத்துக்கு வேப்பிலை கலந்த மஞ்சள் நீரை ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.
மேலும், பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மார்க்கெட் ரோடு பகுதியில் இருந்து பக்தர்கள், நான்கு அடி அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில், 13 வாகனங்களில், பறவை காவடியில் அந்தரத்தில் பறந்தபடி பக்தர்கள் வந்தனர். மார்க்கெட் ரோடு, வெங்கட்ரமணன் வீதி, சப் - கலெக்டர் அலுவலக ரோடு, தாலுகா அலுவலக ரோடு, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்தனர். ஜோதி நகரில் பூவோடு நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, 80 அடி ரோட்டில் ஆலாம்பாளையம் கலைக்குழு சார்பில் வள்ளி, கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஜோதிநகர் பகுதி, பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்தனர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும், பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். வரும், 5ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் துவங்குகிறது. கோவிலில் இருந்து துவங்கும் தேரோட்டம், வெங்கட்ரமணன்வீதியில் முதல் நாள் நிறுத்தப்படுகிறது. இரண்டாம் நாள் அங்கிருந்து தேரோட்டம் துவங்கி, சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. மூன்றாம் நாள் தேரோட்டம், சத்திரம் வீதியில் துவங்கி, கோவில் வளாகத்தில் நிறைவடைகிறது. தேர் நிலைநிறுத்தம் முடிந்ததும், தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. நகராட்சி தெப்பக்குளத்தில், மிதவை சப்பரம் அமைத்து, அதில், அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.