திருப்பாச்சேத்தி அருகே பழமையான சிவாலயம், தொல்லியல் துறை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 06:04
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே பூமிக்கடியில் உள்ள பழமையான சிவாலயம் குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட கலைகல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர், ஓய்வுபெற்ற ஆசிரியர் இளங்கோ, ஆய்வு மாணவர்கள் சீனன், இளந்திரையன் உள்ளிட்டோர் திருப்பாச்சேத்தி இலுப்பை தோப்பு என்ற பகுதியில் உள்ள பழமையான நந்தி மற்றும் ஆவுடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில்: சிவாலயத்தின் மேற்பகுதி இன்றி காணப்படும் ஆவுடை என்பதன் சதுரப்பகுதி இங்குள்ளது. இதனை பாதியாக வெட்டி எடுத்து மீண்டும் ஒட்ட வைத்தது போல தெரிகிறது. அலாவுதீனின் தளபதி மாலிக்கபூர் ராமேஸ்வரம் வரை படையெடுத்து வந்த போது அழிக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாக இருக்கலாம், இந்த நந்தியின் காது சிவனின் சொல் கேட்க காதுகளை பின்னோக்கி அமைந்துள்ளதுடன் உடலின் மேற்பகுதியில் கம்ளம் விரிக்கப்பட்டு மூக்கனாங்கயிறும் அமைக்கப்பட்டுள்ளது. மூக்கனாங்கயிற்றுடன் நந்தி சிலை காண்பது அரிது, சொர்ண காளீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் தரைப்பகுதியில் கட்டடம் போன்று அமைந்துள்ளது. இதனை அகழாய்வு செய்தால் மட்டுமே முழுமையான வரலாறு தெரியவரும், என்றனர். திருஞானசம்பந்தருக்கும் சமணர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சம்பந்தரின் ஏடுகள் ஆற்றை எதிர்நோக்கி சென்றதாகவும், சமணர்களின் ஏடுகள் ஆற்றின் போக்கிலேயே சென்று திருப்பாச்சேத்தி அருகே கரையேறியதாகவும் சமணர்களின் நூலே நாலடியார் என்று அழைக்கப்படுவதாக சிவகங்கை ஊரும் பேரும் என்ற நூலில் சிவகங்கை வரலாற்று ஆசிரியர் பாலகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். திருப்பாச்சேத்தி கண்மாய் அருகே வரிவடிவ எழுத்து கல்வெட்டுகள், உறைகிணறுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் இங்கு சிவாலயமும் இருந்திருக்க வாய்ப்புண்டு எனவே தொல்லியல் துறை இந்த இடங்களில் அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.