பிள்ளையார்பட்டி: பிள்ளையார் பட்டி விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பாண்டிய மன்னர்களிடமிருந்து சாசனம் பெற்று தற்போது நகரத்தார் கோயிலாக உள்ளது. எருக்காட்டூர் தச்சன் என்பவரால் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடவரைக்கோயில் ஆகும். தென்னகத்தில் 1600 ஆண்டு கால விநாயகர் வழிபாட்டுச் சிறப்புடையது. இங்கு அங்கு ச பாசமின்றி மோனநிலையில், ஞான தபத்தில், அர்த்த பத்ம ஆசனத்தில் மூலவர் விநாயகர் அருள்பாலிக்கிறார். வலது கரத்தில் சிவலிங்கத்துடன் லோக நலனுக்காக சிவபூஜையுடன் காட்சியளிக்கிறார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பூர்வாங்க பூஜைகள் முடிந்து சுவாமி தரிசனம் தொடங்கியது. பின்னர் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. சிவனின் பிரதிநிதியாகிய அஸ்திரத்தேவருக்கும், விநாயகரின் பிரதிநிதியாகிய அங்குச்தேவருக்கும் தலைமை சிவாச்சார்யர் பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்களால் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் மூலவர் சொர்ண கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.