பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
03:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக புதிய உற்சவர் சிலை செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை துவங்கியதில் இருந்தே, பல்வேறு சர்ச்சைகளும் அதனுடன் எழ துவங்கின. புதிய உற்சவர் சிலை செய்ததில் கிலோ கணக்கில் தங்க முறைகேடு நடந்துள்ளதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் முதல் அர்ச்சகர் வரை பலரும் கைது செய்யப்பட்டனர்.
புதிய உற்சவர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதால், பழைய உற்சவர் சிலை சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. உற்சவர் சிலை முறைகேடு மட்டுமல்லாமல், பல்வேறு விஷயங்கள் சர்ச்சையாகவே செல்வதால், பக்தர்கள் தரப்பிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. நிர்வாக ரீதியாக வெளிப்படைத்தன்மை இல்லாததால், தொடர்ந்து புகார்கள் எழுகிறது.
ஏகாம்பரநாதர் கோவில் தொடர்பாக எழும் சர்ச்சைகள்:
உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இதுவரை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே உள்ளனர்
உற்சவர் சிலை சேதமாகும் என்பதால், அதிக எடை கொண்ட மாலையை அணிவிக்க கூடாது என அறநிலையத் துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும், பிரம்மோற்சம் முழுதும் அதிக எடை கொண்ட மாலைகளே அணிவிக்கப்பட்டன
கோவிலில் இருக்கும் வெள்ளி பல்லக்கில் பதியப்பட்டிருந்த வெள்ளிப்பொருட்கள் மாயமானதாக ஏற்கனவே புகார் உள்ளன. இந்நிலையில், வெள்ளி ரிஷப வாகனம் மற்றும் வெள்ளி பெருச்சாளி வாகனங்களில் பதியப்பட்ட வெள்ளி தகடுகள் பிய்த்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது
பிரம்மோற்சவம் பற்றி சாக்பீசால் வரையப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட போர்டுகள் அகற்றப்பட்டன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த ஓவியங்களை பார்க்க ஆவத்துடன் உள்ளனர்
கோவில் அலுவலக அறையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில், கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
கடந்த 2020 ல் நகை சரிபார்ப்பு நடந்தது. ஆனால், இதுவரை அதுசம்பந்தமான ஆய்வறிக்கை கோவில் நிர்வாகத்திற்கே இன்னமும் வரவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்து உள்ளது
கோவில் உண்டியல் பணம் சமீபத்தில் எண்ணும்போது, லட்சக்கணக்கான ரூபாய் நாசமாகி கிடந்தது. சேதமாகி பயன்படுத்தவே முடியாத நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் விபரம் வெளிப்படையாக தெரிவிக்கவே இல்லை. இதுபோல், ஏகாம்பரநாதர் கோவிலில் நிர்வாக ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தபடியே உள்ளன. அவற்றை அறங்காவலர் குழுவினர் சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.