பந்தலூர்: பந்தலூர் அருகே அம்மன் காவு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், விஷூ விளக்கு திருவிழா கடந்த பாதம் 29ஆம் தேதி நடைதிறப்பு மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் இரவு செண்டை மேளம் நிகழ்ச்சி நடந்தது. 14ஆம் தேதி காலை நடைதிறப்பு, கொன்றை மலர்கள் ஏற்றுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சுத்தி கலச பூஜை, அம்மன் அருள்வாக்கு, கல்லேரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன் கோவிலுக்கு உண்டியல் மற்றும் பூமாலை ஊர்வலம், தீபாராதனை, விளக்கு பூஜை, ஆண்கள் பங்கேற்ற கோலாட்டம், அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு தேவி ஊர்வலம், சிறப்பு பூஜைகள் அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான அம்மனின் அருள்வாக்கு கேட்டல் மற்றும் காணிக்கை சமர்ப்பித்தல் பூஜையில் திரளான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ஸ்ரீதரன் மற்றும் கோவில் கமிட்டியினர், விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.