சதுரகிரியில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2023 04:04
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர்.
காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் மிகவும் உச்சமாக இருந்த நிலையிலும், மதியம் 1:00 மணி வரை சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். மலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பாகவும் பக்தர்களுக்கு அன்னதானம் இடைவிடாது வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.