பதிவு செய்த நாள்
24
செப்
2012
10:09
திருவாரூர்: திருவாரூர் அருகே கோவில் திருப்பணிக்காக, பள்ளம் தோண்டியபோது, அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதால், கிராம மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.திருவாரூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலில், திருப்பணிகள் நடக்கிறது. நேற்று மதியம் திருப்பணிக்காக, தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது, பூமிக்கடியிலிருந்து அம்மன் சிலை ஒன்றை கண்டெடுத்தனர். இதைக்காண, சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டு வந்தனர்.இது குறித்த தகவலின் பேரில், திருவாரூர் தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அம்மன் சிலையை மீட்டு, தாலுகா அலுவலகத்துக்கு பத்திரமாக கொண்டு வந்தனர். பூமிக்குள் கண்டெடுத்த, ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை, ஒன்றேகால் அடி உயரம் இருந்தது.