புதுச்சேரி: நகரின் பல இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் பழைய துறைமுகம் அருகே கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர். சாரம் அவ்வை திடலில் இந்து முன்னணி சார்பில் 21 அடி உயர மகா கணபதி சிலை பிரதிஷ்டை செய்தனர். நேற்று பிற்பகல் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் சாரம் அவ்வை திடலுக்கு வந்தன. சிறப்பு பூஜை நடத்தி கடலில் விசர்ஜனம் செய்ய ஊர்வலம் புறப்பட்டது. காமராஜர் சிலை, நேரு வீதி, காந்தி வீதி வழியாக மாலையில் கடற்கரை காந்தி சிலை அருகே முடிந்தது. மாலை 5.30 மணிக்கு காந்தி சிலை அருகிலிருந்து, கடற்கரை சாலை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.மாலை 6.30 மணிக்கு சாரம் மகா கணபதி சிலையை கிரேன் மூலம் இறக்கி கடலில் விசர்ஜனம் செய்தனர். பின், அனைத்து சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டன.