பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
06:04
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் செய்வதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யாததால் அதிகாரிகள், திருநங்கைகள், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியுள்ளது. கடந்த 18ம் தேதி மாலை 4 மணிளவில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபட்டு சாகை வார்த்தல் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளும் இரவு, சுவாமி வீதி உலா நடந்த வருகிறது. வரும் 1ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.
மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4ம் தேதி விடையாத்தி, 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள், பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு வருவது வழக்கம். அதற்கேற்ப திருவிழா காலத்தில் திருநங்கைகள், பக்தர்கள் தங்கி சுவாமியை வழிபட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒரு சில வாரங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்படும். கூவாகத்தில் உள்ள பக்தர்கள் பயன்படுத்தும் குளம் சீரமைத்து தண்ணீர் நிரப்பப்படும், சாலை வசதி ஏற்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறும். அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு நிதியும் முன்னதாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வரும். ஆனால் தற்போது முக்கிய திருவிழா ஒரு வாரமே உள்ள நிலையில் திருவிழாவிற்கான சிறப்பு நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல துறை அதிகாரிகளும் பணிகளை செய்ய முடியாமல் விழிபிதுங்கி உள்ளனர். கூவாகம் திருவிழாவையொட்டி முன்னேற்ப்பாடுகள் செய்வது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சென்றார். அதன் பிறகும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது இது அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காலம் கடத்தாமல் உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, கூவாகம் திருவிழா சிறப்பாக நடப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.