பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 21ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் வாகன ஊர்வலம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து முக்கட்டி அம்மன் ஆலயத்தில் இருந்து, பறவை காவடி, தொங்கு காவடி , வேல் காவடி மற்றும் தீச்சட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் சென்றடைந்த பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கிராம பகுதிகளில் தேர் ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை மாவிளக்கு பூஜை மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.