பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
09:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜர் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் 1,017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். இவர் தானுகந்த திருமேனியாக ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ராமானுஜரின் அவதார உற்சவ விழா ஸ்ரீபெரும்புதுாரில் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு 1,006ம் ஆண்டு அவதார விழா கடந்த 16ல் துவங்கியது. தினமும், ஒரு வாகனத்தில் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை 5:00 மணி அளவில் ராமானுஜர் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 6:30 மணியளவில் நிலையத்தில் இருந்து தேர் புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளுர் மெயின் ரோடு, திருமங்கையாழ்வார் சாலை வழியாக தேர் பவனி சென்று பகல் 1:00 மணி அளவில் நிலையத்தை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ராமானுஜர் வீதி உலா சென்றார்.
தேரோட்ட விழா துளிகள்: தேர் சென்ற வழிகளில் பக்தர்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மோர், குளிர்பானங்கள் பல இடங்களில் அன்னதானமாக வழங்கப்பட்டன.l பக்தர்கள் பலர் தேருக்கு முன்னாலும், பின்னாலும் பஜனை பாடல் பாடியவாறு சென்றனர்.l ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கும் பாஸ் அமைப்பினர் தேருக்கு பின்னால், சென்று பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு வீசி சென்ற தட்டுக்கள், டம்ளர்கள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்தனர்.l ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் செல்லும் வழிகளில் பக்தர்கள் தங்கள் நகைகளையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு ஒலி பெருக்கியில் தொடர்ந்து அறிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். தேர் செல்லும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.l தேருக்கு முன்னால் சென்ற கோவில் யானை கோதையிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து சென்றனர்.