பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
விழுப்புரம்: பழமை வாய்ந்த கண்டமானடி அபிராமேஸ்வரர், சுந்தரவிநாயகர் கோவில்களை சீரமைத்திட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தில், முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்த இந்த கோவில், புனரமைக்கப்பட்டு கடந்த 1984ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்து அறநிலையத்துறை மண்டல தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்த கும்பாபிஷேக விழாவில், கிருபானந்த வாரியார் பங்கேற்று விழாவை நடத்திய பெருமை பெற்ற ஸ்தலமாக உள்ளது.சீதைபிராட்டியை தேடி வந்த ராமன், இந்த கோவிலில் தங்கி அபிராமேஸ்வரரை வழிபட்டதாகவும், இங்கு வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுமென ஐதீகம் உள்ளது.கோவிலில் அபிராமேஸ்வரர், அம்பாள் முத்தாம்பிகைக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றிலும், நவக்கிரக சன்னதிகள், நாகம்மை, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளது.பிரமாண்ட சுற்று மதில் சுவருடன் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.இந்த கோவில் பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. கோவில் கோபுர சிற்ப வேலைப்பாடுகள் அழகிய தோற்றத்துடன் உள்ள நிலையில், கீழ் பகுதியில் உள்ள சுவர் கட்டமைப்புகள் பராமரிப்பின்றி சேதமாகியுள்ளது.கோவில் மண்டப பகுதி சுவர்கள் விரிசலடைந்து காணப்படுகிறது. மழையின் போது தண்ணீர் தேங்கி ஒழுகும் நிலைக்கு கோவில் கட்டடம் தள்ளப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு விளக்கேற்ற மட்டுமே மாதம் 200 ரூபாய் வழங்கி வருகின்றனர். பூஜைகள் செய்து வரும் பூசாரியும் சம்பளம் ஏதுமின்றி, பிரதோஷ வழிபாடுகளை மட்டும் தொடர்ந்து வருகிறார்.சுந்தரவிநாயகர் கோவில் : இதே போல் மற்றொரு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலும் பிரமாண்ட கோபுரங்களுடன், பெரிய சுற்றுசுவர்கள் இருந்தும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் தங்கி பூஜித்து வருகின்றனர். இந்து அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோவில்கள் பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, கோவில் இடங்கள் ஆக்கிரமிப்பிலும் சிக்கி வருகிறது.இந்த கோவிலிற்கான நிலங்கள், புளிய மரங்கள் அறநிலையத் துறை மூலம் ஏலம் விடப்பட்டு, குத்தகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியைக் கூட பயன்படுத்தாமல், தினசரி விளக்கேற்றி வரும் நடைமுறையை மட்டும் பின்பற்றும் பரிதாப நிலையில் கோவில் நிர்வாகம் உள்ளது.பழமை வாய்ந்த இந்த கோவிலை சீரமைத்து, புதுப்பித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்து அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.