வைக்கோல் பிரி திருவிழா: முகமூடியுடன் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2012 10:09
மேலூர்: மேலூர் அருகே வெள்ளலூரில், ஆண்கள் உடலில் வைக்கோலை சுற்றியும், பெண்கள் தலையில் மதுக்கலயம், கைகளில் உருவ பொம்மைகளை ஏந்தியும் நேர்த்திக் கடன் செலுத்தும் திருவிழா நடந்தது. வெள்ளலூர் பகுதி, 58 கிராமங்களை உள்ளடக்கியது. ஆவணியில் இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோயில் விழா கொண்டாடப்படும். 15 நாட்களுக்கு முன், 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்ற அந்த ஏழு சிறுமிகளும் 15 நாட்கள் இரவில் கோயிலில் தங்கி இருந்து, பகலில் 58 கிராம மக்களையும் சந்தித்து ஆசிர்வாதம் வழங்கினர். அம்மனாக தேர்வான சிறுமிகளை, தெய்வமாக எண்ணி மக்கள் வழிபட்டனர். நிறைவு நாளான நேற்று ஆண்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியும், முகத்தில் முகமூடியுடன் சென்றும் நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள், தலையில் மதுக்கலயம், கைகளில் மண் பொம்மைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். குறிச்சிபட்டியில் உள்ள சின்ன ஏழைகாத்தம்மன் கோயிலில் நேர்த்தி கடனை செலுத்தினர்.