பதிவு செய்த நாள்
30
ஏப்
2023
10:04
சென்னை-ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன், தன் அமைச்சர் அனிருத்த பிரம்மராயருக்கு நில தானம் அளித்த அன்பில் செப்பேட்டை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ளது அன்பில். அங்கு, 1,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அனிருத்த பிரம்மராயர். பிராமணரான இவர், ஒரு வைணவ பக்தர். இவரின் தாத்தா அனிருத்தரும், தந்தை நாராயணனும், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அமுது படைத்த கொடையாளர்கள்.
ஒப்படைப்பு: அந்த வழியில் இவரும், பங்குனி உத்தரத்தன்று அமுது படைத்தார். மேலும், வறுமையில் உள்ளோருக்கு தானியங்களையும் தானம் அளித்தார். அவர், ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் அமைச்சராக இருந்தார். அனிருத்த பிரம்மராயரின் நிர்வாகத் திறமைக்கு அங்கீகாரமாக, பிரமாதிராசன் என்னும் பட்டத்தையும், மயிலாடுதுறை அருகில், கருணாகரமங்கலம் என்ற பெயரில், 10 வேலி நிலத்தையும் சுந்தர சோழன் வழங்கினார். இவற்றை, மாதவபட்டன் வாயிலாக, 11 செப்பேடுகளில் எழுதி ஒப்படைத்தார். இந்நிகழ்வுகள் நடந்து, 1,000 ஆண்டுகளுக்குப் பின், அன்பில் பகுதியில், ஒரு விவசாயி வீடு கட்ட கடைக்கால் தோண்டினார். அப்போது, சுந்தர சோழன் தந்த செப்பேடு வெளிப்பட்டது. அதை அவர், அந்த ஊரின் லெட்சுமணன் செட்டியாரிடம் தந்தார். அவர், அப்போது, ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரித்த உ.வே.சாமிநாத அய்யரிடம் அளித்தார். அவர், மத்திய அரசின் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த பன்மொழி வித்தகர் டி.ஏ.கோபிநாத ராவ் என்பவரிடம் கொடுத்தார். கோபிநாத ராவ், அதை படியெடுத்து, அதைப் பற்றிய தகவல்களை, எபிகிராபி இண்டிகா எனும் நுாலின் 15ம் பாகத்தில், ஆங்கிலத்தில் பதிவு செய்தார்.
தமிழக செப்பேடு குறித்த செய்தியை, தமிழில் எழுத, கல்வெட்டு ஆய்வாளர்கள் செப்பேட்டை தேடினர்; கிடைக்கவில்லை. இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டாய்வாளர் கோபிநாத ராவின் நுாலில் இருந்து மொழிபெயர்த்து, தமிழில் நுாலாக வெளியிட்டார்; பலரும், இதைத் தேடினர். இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், அன்பில் செப்பேடு குறித்து தகவல் அளிக்கும்படி, மத்திய தொல்லியல் துறையிடம் கேட்டிருந்தார். அதுகுறித்த தகவல் ஏதும் எங்களிடம் இல்லை என, மத்திய தொல்லியல் துறையின், மைசூரு பிரிவு பதில் அளித்துள்ளது. இதனால், ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: சமஸ்கிருதத்திலும், தமிழிலும் உள்ள அன்பில் செப்பேடு, சோழர்களின் மிக முக்கிய ஆவணம் என்பதை விட, தமிழகத்தின் முக்கிய ஆவணமாக உள்ளது. காரணம், மூவேந்தர்களை வென்று, தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்த சோழர்களின் காலத்தில், தானம் அளிக்கப்பட்டதன் அடையாளம் அந்த செப்பேடு.
நடவடிக்கை: அதில், சோழர்களின் தலைமுறை குறித்தும், அவர்களின் போர்கள், வெற்றி, கல்வி, மருத்துவ, ஆன்மிகப் பணிகள் குறித்தும், விரிவான விபரங்கள் உள்ளன. அந்த செப்பேடு, மத்திய தொல்லியல் துறையின், கோல்கட்டா, டில்லி அல்லது மைசூரு பிரிவில் தான் இருக்கும் அல்லது நீதிமன்ற விவகாரங்களில் சாட்சியாக அளிக்கப்பட்டு இருக்கலாம். அதை, திறந்தநிலை சுற்றறிக்கை வாயிலாகவோ, மத்திய கலாசார துறையின் வாயிலாகவோ மீட்க, உடனடி நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.