பதிவு செய்த நாள்
02
மே
2023
05:05
செஞ்சி: செஞ்சியில் இன்று நடந்த கமலக்கன்னியம்மன் கோவிலில் தேர் திருவிழாவில் ஆயிரக்கண பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நுாறு ஆண்டுகளாக தேர்திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது. 9ம் நாள் விழாவாக இன்று காலை மாரியம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. பகல் 12 மணிக்கு ராஜகிரி கோட்டை காளியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும், திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்தனர். பகல் 2 மணிக்கு ராஜாகிரி கோட்டை பிரதான வாயிலிலும், பீரங்கிமேடு மந்தை வெளியிலும் பாரம்பரிய முறைப்படி எறுமை கிடா வெட்டி பலிகொடுத்தனர்.
தொடர்ந்து 41 அடி உயர தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன் மற்றும் காளியம்மன் திரிசூலத்தை ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை ரோடு, விழுப்புரம் ரோடு, சந்திரத்தெரு வழியாக தேர் பவனி நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தானியம், காய்கனி, நாணயம் ஆகியவற்றை தேர் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., கவினா தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.