பதிவு செய்த நாள்
03
மே
2023
02:05
தஞ்சாவூர் : திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான, ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவில், சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெற்றது. இதில் மரகதலிங்கத்துக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (03ம் தேதி) காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் உலா வந்தது. திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் பொதுமக்கள் தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான சப்தஸ்தான பெருவிழா வரும் 6ம் தேதி நடக்கிறது. அன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. 7ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக் குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 வது குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞனசம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.