பதிவு செய்த நாள்
05
மே
2023
06:05
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
பிள்ளையப்பன் பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், 23 வது ஆண்டு சித்ரா பவுர்ணமி பூச்சொரிதல் விழா இன்று நடந்தது. அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் உச்சி கால பூஜை நடந்தது. மாலையில் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பூக்கள் அடங்கிய கூடைகள் உடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சமர்ப்பித்தனர். இதையடுத்து பவுர்ணமி வழிபாடு நடந்தது. அம்மன் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழமையான, அன்னூர் பெரிய அம்மன் கோவிலில், நேற்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் வட்டாரத்தில் உள்ள கதவுகரை, எல்லப்பாளையம், கணேசபுரம், குன்னத்தூர் கோவில்களில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.