எமக்கலாபுரம் காளியம்மன், கருப்பணசாமி கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2023 11:05
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே எமக்கலாபுரம் காளியம்மன், கருப்பணசாமி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கடந்த ஏப்.28 சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நேற்று அம்மனுக்கு கரகம் ஜோடிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வானவேடிக்கையுடன் வீதி உலா வந்து கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். அதனை தொடர்ந்து சிறுவர்கள், இளைஞர்கள் முகத்தில் சந்தனம் பூசி,தலையில் தலைப்பாகை கட்டி,கையில் அரிவாள்,கம்புகளை எடுத்துக் கொண்டு கருப்புக் கண்ணாடியுடன் கருப்புசாமி போல் வேடம் அணிந்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக நடனம் ஆடியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.மேலும் மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. இதில் ஊராட்சி தலைவர் சுரேஷ் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.