பதிவு செய்த நாள்
16
மே
2023
04:05
திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது.
வேதமலைக் குன்றுகள், 3 கி.மீ., சுற்றளவில் விரிந்துள்ளன. இப்பகுதி மற்றும் சுற்றுப்புற பக்தர்கள், பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று, இறைவனை தரிசித்து வழிபடுகின்றனர். கோவில், மலைக்குன்று அடிவாரத்திலிருந்து, 300 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது. கீழிருந்து குன்றின் மேல் செல்ல, 560 படிகள் உள்ளன. முதியோர், பெண்கள், சிறுவர்கள் படியில் ஏற இயலாமல் சிரமப்படுகின்றனர். கோவில் ஊழியர்கள் கோவிலுக்கு சென்று திரும்ப தாமதமாகிறது. வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்ல, ரோப் கார் அல்லது மலைக்குன்றில் வாகன பாதை அமைக்க, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மலைக்குன்றின் உச்சிப்பகுதி குறுகியதாக உள்ளதால், ரோப் கார் இயக்கம் குறித்து குழப்பம் இருந்தது. இதனால், வாகன பாதை அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர் சேகர்பாபு, திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ரோப் கார் இயக்கப்படும் என அறிவித்தார். அதன் பின், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, இட்காட் நிறுவனம், 11.97 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொண்டது. ஆய்வுப் பணிகளை அமைச்சரும் பார்வையிட்டார். முடிவில், ரோப் கார் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், திருக்கழுக்குன்றம் மலையில் உள்ளதாக, நிறுவனம் தெரிவித்தது. மலைக்குன்றின் மேற்கில், செங்கல்பட்டு சாலை அடிவார பகுதியிலிருந்து, ரோப் கார் இயக்கும் தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்க, மண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரோப் கார் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக்கோரி, அரசிடம் பரிந்துரைக்க முடிவெடுத்திருப்பதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணி துவங்க தயார்; வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி செல்ல, ரோப் கார் இயக்குவதாக, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார். தற்போது, திட்டத்திற்கு மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைப்போம். ஒப்புதல் அளித்ததும், பணிகளை துவக்க தயாராக உள்ளோம்.
- நிர்வாகிகள், வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்.