பதிவு செய்த நாள்
18
மே
2023
10:05
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் வேட்டைக்காரசாமி திருக்கோவிலில் பெரியசாமி திருவிழா நடந்தது.
இந்த கோவிலில் பொன்னர், சங்கர், தங்காள், செல்லாண்டியம்மன் தெய்வங்கள் உள்ளன. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய சுவாமி திருவிழா நடக்கிறது. கடந்த,10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பொன்னர், சங்கர், தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், கிடாவுடன் மேளதாளம் முழங்க பறைசாற்றி வருதல், தங்காள், செல்லாண்டியம்மன் தீர்த்தம் எடுத்து வந்து அண்ணன்மார்களை எழுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொம்பனை குறிவைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடா வெட்டியதும் தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிடா விருந்தும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.