பதிவு செய்த நாள்
19
மே
2023
11:05
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால், கிரி பிரகாரத்திலேயே பாலை கொட்டி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், கடந்த 6ம் தேதி காவடி எடுத்து, பாதயாத்திரையாக நேற்று திருச்செந்துார் வந்தனர். வேண்டுதலை நிறைவேற்றுவற்காக, 51 பால்குடம் எடுத்து சண்முக விலாச மண்டபம் வந்தனர். கோவில் நிர்வாகத்தினர் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், தலையில் சுமந்து வந்த 51 பால் குடத்தையும் கிரி பிரகாரத்தில் கொட்டினர். ஒன்பது நாட்களாக 250- கி.மீ., பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையே என, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு, தனி வரிசையை ஏற்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து கோவிலை கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி, பக்தர்களிடம் கெடுபிடியாக பணம் வசூல் செய்வதை, கோவில் நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.