சீர்காழி சட்டநாதர் கோவிலில் யாகசாலைக்காக 4 யானைகள் மீது புனிதநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 10:05
மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோவிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் யாகசாலைக்காக 4 யானைகள் மீது புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் உடன் அருள் பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 24-ஆம் தேதி புதன்கிழமை காலை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நாளை சனிக்கிழமை மாலை தொடங்க இருப்பதை முன்னிட்டு யாகசாலை கலசத்திற்காக புனித நீர் தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரானது நான்கு கடங்களில் நிரப்பப்பட்டு நான்கு யானைகள் மீது அமர்ந்த சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். அப்போது ஒட்டகம், குதிரை முன் செல்ல, சிவ வாத்தியம், மேளதாள வாத்தியம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். பின்பு கொண்டுவரப்பட்ட புனித நீரை பாதுகாப்பாக யாகசாலையில் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த நிகழ்வின் போது தருமபுரம் ஆதீன கட்டளைத் தம்பிரான்கள், சீர்காழி எம்எல்ஏ. பன்னீர்செல்வம், சென்னை மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர்.