அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு, 63 நாயன்மார் சிலைகள் உடைப்பு: பக்தர்கள் கொதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 12:05
அவிநாசி: திருப்பூர், அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு (மே 22) திருட்டு முயற்சி நடைபெற்றதுடன், அங்கிருந்த 63 நாயன்மார்களின் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பக்தர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நேற்றிரவு (மே 22) திருட்டு முயற்சி நடந்துள்ளது. கோவிலில் உள்ள உண்டியல்களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த திருட்டு முயற்சியில், செம்பினாலான வேல் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதில் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள சாமி சிலைகள், கதவுகள் மற்றும் 63 நாயன்மார்களின் சிலைகளை சுக்குநூறாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த பக்தர்கள், சாமி சிலைகளை சேதப்படுத்தி, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கயவர்கள் உடனடியாக கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். சம்பவ இடத்தில் அவிநாசி டிஎஸ்பி பவுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முக்கிய திருத்தலங்களில் ஒன்றான லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.