பதிவு செய்த நாள்
25
மே
2023
10:05
அவிநாசி: அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள விஜிவி ஸ்ரீ கார்டனில் எழுந்தருளியுள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள விஜிவி ஸ்ரீ கார்டனில் எழுந்தருளியுள்ள வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,கடந்த 22ம் தேதி திருமுருகநாத சுவாமி கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வெற்றி விநாயகர் கோவிலுக்கு வந்தனர்.அதனைத் தொடர்ந்து தன பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதல் கால யாக வேள்வி பூஜை தொடங்கியது. அதன் பிறகு நேற்று முன்தினம் மங்கள இசை, காயத்ரி மந்திர ஹோமங்கள், 108 வகை மூலிகை ஹோமங்கள், மஹா பூர்ணாகுதி உள்ளிட்ட ஹோம பூஜைகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹா கும்பாபிஷேகம்,நேற்று நான்காம் கால யாக வேள்வி பூஜையாக சோம,சூர்ய, பூஜைகள், நாடி சந்தனம், யாத்ரா தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து மூலாலயம், கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் சிவாச்சாரியார் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதன் பிறகு மஹா தீபாரதனை,பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அழகு வள்ளி கும்மியாட்ட கலை குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில் திருப்பணி கமிட்டி மற்றும் விஜிவி ஸ்ரீ கார்டன் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.