பதிவு செய்த நாள்
27
மே
2023
01:05
அவிநாசி,: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிலைகள் சேதப்படுத்தி கொள்ளையடிக்க நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து புராதானமிக்க கோவிலின் பாதுகாப்பில் அலட்சியமாக நடந்து கொள்ளும் ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 22ம் தேதி மாலை பக்தர்களோடு பக்தர்களாக உள்ளே நுழைந்த சரவண பாரதி என்ற நபர் 63 நாயன்மார்கள் சிலைகளுக்கு பின்புறமாக பதுங்கி இருந்து நள்ளிரவில் மூலவர் சன்னதியில் சாமியின் அலங்காரங்களை கலைத்து, வஸ்திரங்களை தூக்கி எறிந்தும்,63 நாயன்மார்கள் சிலையின் மேல் உள்ள கோபுர கலசங்களை உடைத்தும், செந்தில் ஆண்டவர் சன்னதியில் சிலையில் கை விரல்களை உடைத்தும் சேவல் கொடி மற்றும் வேல் ஆகியவற்றை சேதப்படுத்தியும் உண்டியல்களை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.அதன் பிறகு 22ம் தேதி காலை கோவில் நடை திறப்பின் போது ராஜகோபுரத்தில் ஏறி பதுங்கிக் கொண்டார். அதனையடுத்து தகவல் அறிந்த பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் கோவிலின் மூலவர் சன்னதிக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. மூன்று உண்டியல்களை சேதப்படுத்தும் போது கோவிலில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கவில்லை. கோவிலில் அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு நடை சாத்துவதற்கு முன்பாக கோவில் காவலாளி முறையாக தனது பணியை செய்யவில்லை ஆகிய பாதுகாப்பு குளறுபடிகள் மற்றும் மெத்தனமாகவும் அலட்சியப் போக்காகவும் செயல்பட்டு வந்த செயல் அலுவலர், கோவில் பணியாளர்களை கண்டித்து துறை ரீதியான நடவடிக்கை கோரியும் ஆயிரம் ஆண்டுகால புராதனமிக்க வரலாற்றுச் சிறப்புடைய காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரிய கோவிலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கைலாச வாத்தியங்கள்,சங்கு நாதம் முழங்க ஊர்வலமாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் பெரிய தேர் நிலையில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடமான அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றனர்.அதன் பிறகு,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையற்றார். மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் இந்து முன்னணி அமைப்பாளர் பக்தன் ஜி சிறப்புரையாற்றினார்.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில்,காடேஸ்வர சுப்பிரமணியம் பேசியபோது: கடந்த 1990 ம் ஆண்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் தீ வைத்து எரிக்கப்பட்டது.அதன் பிறகு 2003 ம் ஆண்டு கருணாம்பிகை அம்மன் சன்னதிக்குள் புதிய ஏற்பாடு புத்தகத்துடன் நுழைந்த மர்ம நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2020 ம் ஆண்டு கோவிலில் உள்ள குளத்தில் குதித்து ஒருவர் தற்கொலை செய்தார். மேலும் கடந்த 2022ம் ஆண்டு கோவிலுக்கு பின்புறம் பொதுமக்கள் வழிபட்டு வந்த விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மீது குறி வைத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்ற போதும்,தற்போது வரை மேற்கண்ட சம்பவங்களில் ஒருவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கப்பட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர். இந்து கோவில்கள் இந்து கலாச்சாரங்களை அழிப்பதற்கு எனவே வெளிநாட்டு சதியின் மூலமாக இங்கு உள்ள அரசியல்வாதிகள் கைக்கூலிகளாக பணத்தைப் பெற்றுக் கொண்டு இது போன்ற அவச் செயலில் ஈடுபடுகின்றனர். கோவை குண்டு வெடிப்பில் இதே முறையைத்தான் கையாண்டார்கள் ஆண்டாண்டு காலம் கோவை மக்களின் காவல் தெய்வமாக போற்றி வரும் கோவிலை தகர்க்க நடைபெற்ற சதிதிட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டது அனைவரும் நன்கு அறிவார்கள். தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் இந்து மக்களின் இந்து கோவில்களின் இந்து கலாச்சாரத்தின் பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வருணபகவான் ஆசிர்வாதித்து விட்டார்.அடாது கன மழையிலும்,நனைந்தபடியே ஆர்ப்பாட்டத்தில் நின்று கொண்டிருக்கும் அனைத்து சிவனடியார்களுக்கும்,பொதுமக்களுக்கும்,பக்தர்களுக்கும் எனது நன்றிகள்.இன்றைய கால குழந்தைகளுக்கு பக்தி நெறியை சொல்லித் தர வேண்டும் ஒவ்வொருவரும் நமது மதத்தையும் கோவிலையும் பாதுகாக்க உணர்வுடன் செயல்பட வேண்டும் என பேசினார். இதில்,இந்து முன்னணி கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கேசவன், மணிகண்டன், மாரிமுத்து,அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் இராமநாதன் பிள்ளை, பவானி வேலுச்சாமி, அம்பலத்தரசு, கிருஷ்ணமூர்த்தி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் சண்முகம்,மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளாதேவி,நகரச் செயலாளர் நாகராஜ்,தெற்கு ஒன்றிய செயலாளர் சிந்தாமணி முருகேசன் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.