பதிவு செய்த நாள்
27
மே
2023
06:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கோடி தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை தபால்துறையினர் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இதில் 22வது கோடி தீர்த்தம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய மகிமை கிடைக்கும். இந்நிலையில் இந்த கோடி தீர்த்தத்தை தனி நபர்கள் யூடியுப் மூலம் அதிக விலைக்கு விற்பதாகவும், தீர்த்தம் உண்மையானது தானா என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அஞ்சல் துறை, ஹிந்து அறநிலையதுறை இணைந்து ஆன்லைனில் (www.tnhrce.gov.in) 100 மி.லி., கோடி தீர்த்தம் செம்பில் அடைத்தும், 100 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாத பாக்கெட் விற்கிறது. இதனை ராமேஸ்வரம் அஞ்சல் துறை ஊழியர்கள் புக் செய்து அந்தந்த பகுதி அஞ்சல் துறை அலுவலகத்திற்கு அனுப்பியதும், டோர் டெலிவரி செய்யப்படுகிறது. கோடி தீர்த்தம், பிரசாதம் அடங்கிய பார்சலை 200 கி.மீ., க்குள் உள்ள பக்தருக்கு கட்டணம் ரூ.205ம், 200 முதல் 1000 கி.மீ., வரை ரூ. 215, ஆயிரம் கி.மீ., மேல் ரூ.235 ஆகும். இக்கட்டணத்தை பக்தர்கள் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் தெரிவித்தார்.