நாக்பூர்: மஹாராஷ்டிர மாநிலத்தில் நான்கு முக்கிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தின் நான்கு முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; இது குறித்து கோவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சினில் கன்வாட் கூறியதாவது: நாக்பூரில் உள்ள தாந்தோலி கோபாலகிருஷ்ணன் கோவில், பெலோரி சங்கத்மோச்சன் பஞ்சமுக அனுமன் கோவில், கனோலிபாரா பிரகஸ்பதி கோவில் மற்றும் ஹில்டாப்பில் உள்ள துர்கா மாதா கோவில் ஆகியவற்றில் உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆட்சேபனைக்குரிய, அநாகரிகமான உடைகளை அணிந்து வரக் கூடாது. அதாவது உடலை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ் போன்ற உடைகள், ஷார்ட்ஸ் போன்ற குட்டையான உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.