சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு அம்மன் அன்னபக்ஷி வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவின் 7ம் நாள் விழாவான நேற்று காலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வளையல்காரத் தெருவில் உள்ள அக்கசாலை விநாயகர் கோயிலுக்கு வந்தார். இதையடுத்து பூசாரி சண்முகவேல் தலைமையில் அம்மனுக்கு அப்பகுதியைச் சார்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மாவட்ட நீதிபதி சுந்தராஜ் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார். இதையடுத்து பக்தர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து மேளதாளம், அதிர்வேட்டு முழங்க கரகம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சேர்மன் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து அம்மன் அன்னபக்ஷி வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் புறப்பாடாகி, கோயிலை வந்தடைந்தார். மண்டகபடிதாரர் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் உறவின்முறையினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.