திருநெல்வேலி: நெல்லை கைலாசபுரம் கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை ஜங்ஷன் கைலாசபுரத்தில் பழமை வாய்ந்த கைலாசநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்ற ஸ்தலம். இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 2௦ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகளும், சுவாமி, அம்பாள் அலங்கார தீபாராதனையும், சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளலும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (29ம் தேதி) சுவாமி, அம்பாள் தாமிரபரணியில் தீர்த்தவாரி தைப்பூச மண்டப படித்துறையில் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.