பதிவு செய்த நாள்
29
மே
2023
03:05
பல்லடம்: அருங்காட்சியகத்தில் கைத்தடியாக இருந்ததை செங்கோலாக நிறுவி, பிரதமர் மோடி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என, காமாட்சிபுரி ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை: அனைத்து இன மக்களும் வாழும் நமது நாட்டில், அனைத்து மத பிரார்த்தனைகளுடன், 25க்கும் மேற்பட்ட குரு மகா சன்னிதானங்கள் ஆசி வழங்க, பாரதப் பிரதமர் கைகளால், புதிய பாராளுமன்ற கட்டடத்தின் மையப் பகுதியில் செங்கோல் நிறுவப்பட்டது. செங்கோலின் மேல் பகுதியில் பசு மாட்டின் சின்னம் உள்ளது. பசுமாடு என்பது உலகத்தின் ஒரு புனித சின்னமாக கருதப்படுகிறது. இந்துக்கள், தர்ம தேவதையாக பசுமாட்டை வழிபடுகின்றனர். தமிழகத்தில் இருந்து, 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால், அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலானது, அருங்காட்சியகம் ஒன்றில் கைத்தடி என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நமது பாரதப் பிரதமர், நமது மண்ணின் மைந்தர்களால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மையப்பகுதியில் செங்கோலை நிறுவி அதற்கு சிறப்பு சேர்த்துள்ளார். இந்தியாவில் எத்தனையோ மதங்கள் உள்ள சூழலில், தமிழகத்தில் உள்ள குரு மகா சன்னிதானங்களை வரவழைத்து, அனைவரையும் கவுரவித்து, இந்துக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒவ்வொரு சன்யாசிகள் முன்னிலையிலும், பிரதமர் குனிந்து ஆசி பெற்றது நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. செங்கோல் முன், பிரதமர், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது, பெருமிதம் கொள்ளும்படியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாட்டில் உள்ள தீமைகள் அழிந்து, நாடு வளம் பெற வேண்டி, அனைத்து குரு மகா சன்னிதானங்களும் ஒரே இடத்தில் கூடி, அவரவர் முறைப்படி வழிபாடுகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.