பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
11:06
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் மலை ஏறுவதற்கான அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலையொட்டியுள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். இந்தாண்டு, வெள்ளியங்கிரி மலை ஏற, கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் அனுமதியளித்திருந்தனர். இதனையடுத்து, தமிழகம் மற்றுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, வெள்ளியங்கிரி மலை ஏறி, ஈசனை தரிசித்தனர். இந்நிலையில், பக்தர்கள், வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, வனத்துறையினர், நேற்று இரவு, மலை படியில் உள்ள கேட்டை பூட்டி, மலை ஏற அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைத்தனர்.