பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
05:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே வீராசாமி நகரில் உள்ள, விஜய விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில், ஜடையம்பாளையம் ஊராட்சி ஆலாங்கொம்பு அருகே வீராசாமி நகரில், விஜய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் செய்து, பனிரெண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய, கோபுரங்கள், கோவிலுக்கு வர்ணம் தீட்டி, திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த, 30ம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் முதல் கால வேள்வி பூஜை துவங்கியது. விழாவில் நான்கு கால வேள்வி பூஜைகள் நடந்தன. இதில், 108 மூலிகைகள், வாசனை திரவிய பொருட்கள் ஆகியவற்றை போட்டு, யாக வேள்வி பூஜையை செய்தனர். சிறுமுகை மூலத்துறையை சேர்ந்த குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர், யாக வேள்வி பூஜைகளை செய்தனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருஞானசம்பந்தன் ஓதுவார் தலைமையில், யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்களை, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசங்கள் மீதும், மூலவர் மற்றும் பரிவார் சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இந்த விழாவில் கோவை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கவுமார மடாலய சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், அருண்குமார், செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறுமுகை ராமகான சபா தண்டபாணி குழுவினரின், நாம சங்கீர்த்தன பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.