குன்றக்குடி ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் சுவாமி,அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. 5ம் திருநாளில் திருக்கல்யாணம், நேற்று முன்தினம் 9ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டமும் நடந்தது. நேற்று கார்காத்த வெள்ளாளர்கள் சமூக மண்டகபடிதாரர் சார்பில் நடந்த தெப்ப விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நடந்தது. அஸ்திரத் தேவருக்கு குளத்தில் நீராடி, சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடந்தது. இரவு 6:45 மணிக்கு சுவாமி கோயிலிலிருந்து புறப்பாடாகி சீதளி தெப்பக்குளம் கிழக்கு படித்துறை தெப்ப மண்டபம் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் புறப்பாடாகி தெப்பத்தில் எழுந்தருளல் நடந்தது. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் சீதளி குளத்தை மும்முறை வலம் வந்தது. குளத்தைச் சுற்றி பக்தர்கள் நின்று தெப்பத்தை தரிசித்தனர்.