பதிவு செய்த நாள்
04
ஜூன்
2023
08:06
மேட்டுப்பாளையம்: புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில், பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய, கொங்கு மண்டலத்து ஆதீன சுவாமிகளுக்கு, மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லியில், புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கோவை கொங்கு மண்டலத்தை சேர்ந்த பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதாந்தானந்தா சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று, பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். இந்த ஆதீனங்களுக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் நுழைவாயிலில் ஆதீனங்களுக்கு பாத பூஜை செய்து, மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்து சமுதாய சங்கத்தினர், ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள், சர்வ மங்கள தியான பீடம், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சங்கீதா கவுதம், துணைத் தலைவர் கலைவாணி பழனிசாமி, செயலாளர் சாந்தி பொன்னுசாமி, ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத சன்னியாசிகள் சங்க நிர்வாகிகள் சசிகுமார், நந்தகிருஷ்ணன், சரவணன், செந்தில், பிரகாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.