பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
12:06
பழநி, சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை கோவில்களில், ஜூலை 1 முதல் இடைநிறுத்த சிறப்பு தரிசன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழகத்தின் நான்கு முக்கிய கோவில்களில், திருப்பதி கோவிலில் இருப்பது போல, இடைநிறுத்த சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. தற்போது, அதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, பக்தர்களிடம் இருந்து கருத்து கேட்புக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
சிரமம்: இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது:பழநி, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை கோவில்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.காலையில் இருந்து இரவு வரை, இடைவிடாமல் பக்தர்கள் வருகின்றனர். இதனால், முக்கிய பிரமுகர்கள், முதியோர், கைக்குழந்தையுடன் வருவோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதில் சிரமம் உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும் என, கோரிக்கைகள் வந்தன. இதையடுத்தே, திருப்பதி கோவிலில் இருப்பது போன்ற இடைநிறுத்த சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதையும் இலவசமாக வழங்காமல், கோவிலுக்கு வருமானத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது; மதியம் 3:00 மணி முதல் 4:00 மணி வரை, இதில் தரிசிக்கலாம். ஒரு நபருக்கு தரிசன கட்டணமாக, 500 ரூபாய் வசூலிக்கப்படும்.
ஒரு நாளைக்கு, 300 பேர் மட்டுமே, இந்த சிறப்பு திட்டம் வாயிலாக, சுவாமி தரிசனம் செய்ய முடியும்.இந்த திட்டம் வாயிலாக, ஒரு நாளைக்கு, 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். திட்டம் வெற்றி அடைந்தால், தினமும், 3 லட்சம் ரூபாய் என, மாதம் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தை தமிழகத்தின் மற்ற கோவில்களுக்கும் விரிவுபடுத்தும் எண்ணமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அரசின் இந்த முயற்சிக்கு, பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் பக்தர் திருச்சி பிரகாஷ் கூறியதாவது:கடவுளுக்கு முன் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. ஆனால், இடைநிறுத்த சிறப்பு தரிசனம் என்ற பெயரில், 500 ரூபாய் கட்டணம் வசூலித்து, விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றால், ஏழை, பணக்காரன் வித்தியாசம் ஏற்படத் தானே செய்யும்? கால் கடுக்க பல மணி நேரம் காத்திருந்து, சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மேலும் ஒரு மணி நேரம் தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டும்.
நாடகம்: இந்தத் திட்டத்திற்கு திருப்பதியை உதாரணம் காட்டுகின்றனர்.அங்கே பக்தர்கள்தரிசனத்துக்காக, எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும், சாப்பாடு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்காக சிரமப்பட வேண்டியதில்லை. நம்ம ஊர் கோவில்களில், அப்படி ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா? வருமானத்துக்காக ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு, பக்தர்களுக்கு நன்மை செய்வது போல நாடகமாடுகின்றனர். இவாறு அவர் கூறினார். - நமது நிருபர் -