காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி மண்டப மேடையில் அபூர்வ ஒளி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2012 11:10
கன்னியாகுமரி: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் ஜெயந்திவிழா 2ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழும் அபூர்வ சூரிய ஒளியைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மாகாந்தியடிகள் 1948ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தியை கலசங்ளில் சேகரித்து நாட்டில் உள்ள புனிதநதிகள்,கடல்கள், மலைகள், காடுகள் போன்றவற்றில் தூவவும்,கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 1948ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி காந்தியடிகளின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் அவரது அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய இடத்தில் நினைவுமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு 1954ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் 79 அடி உயரத்தில் இந்திய கலாசாரம், பண்பாடு, இறையாண்மைக்கு எடுத்துக்காட்டாக அகிம்சை, சமாதானம், வாய்மை என்ற தத்துவத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தினுள் காந்தியடிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரிய வகை புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.இந்த மண்டபத்தின் மேல்பகுதியில் நின்று கன்னியாகுமரியின் இயற்கையழகைக் கண்டு ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது,இதன் சிறப்பம்சமாகும். ஆண்டுதோறும் காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி மதியம் 12 மணிக்கு மணடபத்தினுள் உள்ள சிறிய மேடை மீது அபூர்வ சூரிய ஒளி விழுகிறது. இந்த ஆண்டு காந்திஜெயந்தி விழா நாளை (2ம் தேதி) நடக்கிறது. காலை 11 மணிக்கு நடக்கும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நாகராஜன் தலைமை வகிக்கிறார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் பச்சைமால் வழங்கி பேசுகிறார். நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்கிறார். நிகழ்ச்சியில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பி.ஆர்.ஓ., ஹரிராம் நன்றி கூறுகிறார்.