பதிவு செய்த நாள்
16
ஜூன்
2023
05:06
திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை அடுத்த சித்தபட்டினம் கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், பல்வேறு இடங்களில் கல்வெட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மணலூர்பேட்டை அடுத்த சித்தபட்டினம் கிராமத்தில் ஆய்வு மையத்தின் நிர்வாகிகள் உதியன், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், நூலகர் அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சித்தபட்டினம், சிவன் கோவிலுக்கு முன்பாக கல்வெட்டு எழுத்துக்களுடன் மண்ணில் புதைந்திருந்த பலகையை கண்டறிந்தனர்.
முன் பகுதியில் 22 வார்டுகளும், பின்பகுதியில் 27 வரிகளும், சில வரிகள் சிதைந்தும் காணப்பட்டது. சகாப்தம் 1456 நட்சத்திர குறிப்புகளோடு, விஜய ஆண்டு, மீனமாதம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு விஜயநகர பேரரசு அச்சுததேவ மகாராயர் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டதாகும். இவ்வெழுத்துக்கள் விஜய நகர காலத்துக்கு உரியது. மன்மகா மண்டலேஸ்வரன் என்று ஆரம்பிக்கும் மெய் கீர்த்தியைக் கொண்டு கல்வெட்டு வரிகள் துவங்குகிறது. அதாவது குறுக்கைப் கூற்றத்துக்கு வடகரைப் பெண்ணை தேவமண்டலமான, வானகப்பாடி நாட்டுக்கு உட்பட்ட சித்த பட்டினத்து உறையும் உடையார் எடுத்தாயிரம் கொண்டான் கோயிலுக்கு சொந்தமான பழுதடைந்த கட்டிடத்தை பராமரிக்க நிலக் கொடையாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டிற்கு அருகிலேயே ஒரு செப்பு நாணயமும் கண்டெடுக்கப்பட்டது. இது 16ம் நூற்றாண்டை சேர்ந்த பாமினி சுல்தானுடைய ஆட்சி காலத்தில் பயன்பாட்டில் இருந்த நாணயமாகும். ஐந்து முனைகளை கொண்டது. இதன் எடை 10 கிராம், 660 மில்லி. இதன் முன் பக்கம் முகடுகளைக் கொண்ட நதியின் உருவமும், மறுபக்கம் பாரசீக மொழியில் பாமினி சுல்தான் மன்னரான அசன்சா என்ற பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வின் போது சண்முகம், ரவிச்சந்திரன், சாந்தி, தேவி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.